சார்லி சாப்ளின் உடல்மொழியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயன்று, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார் திருடராக வரும் சித்தார்த் ஜாதவ்.
காதல் காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டும் நாயகியாக அதிதி ராவ், க்ளிஷே கதாபாத்திரத்தில் வந்தாலும், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என மகாதேவை உணரச் செய்யும் இடம், அவரைச் சமாதானப்படுத்தும் இடம் போன்ற குறைவான பந்துகளில் டீசண்ட் ஸ்கோர் அடித்திருக்கிறார்.
குறுகிய காம்பவுண்ட் வீடுகள், அப்பகுதியின் இரவு நேரங்கள் உள்ளிட்டவற்றை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத், இந்தத் திரைமொழிக்கு அழகு சேர்க்கும் கேமரா கோணங்களையும் அள்ளித் தந்திருக்கிறார்.
காட்சிகளின் டிரான்சிஷனில் கவனம் கொடுத்த படத்தொகுப்பாளர் அஷிஷ், அன்னநடை போடும் காட்சிகளைச் சுறுசுறுப்பாக்கத் தவறியிருக்கிறார். ‘ஏதோ ஏதோ’ பாடலில் மெல்லிசையால் நம்மை வருடும் ஏ.ஆர். ரஹ்மான், மற்ற பாடல்களில் வைப் நம்பரைத் தராதது ஏனோ!?

அதுபோல, பெரும்பாலான இடங்களில் உணர்வுபூர்வமான பின்னணி இசையைக் கொண்டு இந்தச் சைலண்ட் படத்தின் வால்யூமை அதிகரித்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், சில இடங்களில் திகட்டவும் வைத்திருக்கிறார்.
நெருப்பு, எலி, நொறுங்கிய ஜன்னல் கண்ணாடி எனச் சொற்ப இடங்களில் மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டாலும், அதில் நேர்த்தியைக் கொண்டு வராதது மைனஸ்.