காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு – ‘ஏஐ’ பயன்பாட்டில் வெளிப்படை தன்மை தேவை: சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தல் | Appavu says Transparency is required for AI

1336721.jpg
Spread the love

சென்னை: ‘செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) பயன்பாடு வெளிப்படை, உண்மைத் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நேற்று தொடங்கியது. நாளை (நவ.8) வரை நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று பங்கேற்றார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக ‘நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு – வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா உட்பட பல்வேறு காமன்வெல்த் நாடுகளின், நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவைத் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

காமன்வெல்த் நாடாளுமன்ற தமிழக கிளையின் சார்பில் பங்கேற்று பேரவைத்தலைவர் மு.அப்பாவு பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தகவல்கள் எளிதாகக் கிடைப்பதால், சில நேரங்களில் தவறான தகவல்கள் மற்றும் தவறான செய்திகள் பரவுகின்றன. இதன் காரணமாக எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வெளிப்படையானதாகவும், உண்மைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, பேரவைத்தலைவர் அப்பாவு, அரசுமுறைப் பயணமாக மலேசிய நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு மலேசிய நாடாளுமன்றத் தலைவர் ஜோஹாரி அப்துல் மற்றும் துணை அமைச்சர் ஒய்.பி.குலசேகரன் ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, மலேசிய நாடாளுமன்ற நடவடிக்கைகளை, பார்வையாளர் மாடத்திலிருந்து பேரவைத்தலைவர் அப்பாவு பார்வையிட்டார். நாடாளுமன்றத்தில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் வந்துள்ளது குறித்தும் அறிவிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *