புதுச்சேரி: ‘வாக்கு வங்கிக்காக காமராஜரை விமர்சித்த திமுகவை கண்டிக்க கூட திராணியற்ற கட்சியாக புதுச்சேரி காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் திமுக வேட்பாளர்களுக்கு சரியான தண்டனையை வழங்க வேண்டும்’ என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.
இத குறித்து அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக கூட்டணியில் பட்டியல் பிரிவினரின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஆலோசனையும், அறிவுரையும் அதிமுகவுக்கு தேவையில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக அழிந்துவிடும் என திமுக கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் கருத்து தெரிவித்திருப்பது சந்தர்ப்பவாத செயலாகும். அதிமுக மீது உண்மையில் திருமாவளவனுக்கு அக்கறையும், பாசமும் இருந்தால் அவர் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 25 சதவீத இடங்களில், அதாவது சுமார் 58 இடங்களை வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் பெற்றால் உண்மையில் அதிமுக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்.
தற்போது காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தலைவர் கார்கே ஆகியோர் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க நாடாளுமன்றத்தில் உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என கடிதம் எழுதி உள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சியை பலமுறை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என எந்த சூழ்நிலையிலும் இருவரும் பிரதமரை வலியுறுத்தாதது அவர்களின் சந்தர்ப்பவாத அரசிலை காட்டுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியின் மாநில அந்தஸ்து பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவரான திருச்சி சிவா, மறைந்த காமராஜர் பற்றி தரக்குறைவான கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த முறை கூட்டணியில் பாஜக இருந்தபோது பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அறிஞர் அண்ணா பற்றி தவறாக பேசியதால் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போதே பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தவர் எடப்பாடியார்.
இன்று திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா? காமராஜர் பற்றி தவறாக பேசியது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போதும் காமராஜரை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருகின்றனர். எந்த தலைவரை வைத்து அரசியல் செய்கிறார்களோ, அந்த தலைவரை பற்றி மாற்று கட்சியினர் தவறாக பேசியதை எதிர்த்து கூட பேசாமல் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் இருவரும் உள்ளனர். திமுகவை கண்டித்தால் எதிர்வரும் தேர்தலில் மிகப் பெரிய பாதிப்பு நமக்கு ஏற்படும் என வாய்மூடி மவுனம் காக்கின்றனர்.
அற்ப வாக்கு வங்கிக்காக காமராஜரை விமர்சித்த திமுகவை கண்டிக்க கூட திராணியற்ற கட்சியாக புதுச்சேரி காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் திமுக வேட்பாளர்களுக்கு சரியான தண்டனையை வழங்க வேண்டும். காமராஜர் பற்றி தவறாக பேசிய திமுக எம்பி சிவாவின் கருத்து அனைத்தையும் அதிமுக வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.