காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?

Spread the love

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்!

அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று‌ வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, “பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றனர்.

குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, “சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும்” என்றனர்.

இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, “புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும்” என்றார்.

சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *