எந்த அறிகுறியுமே இல்லாமல் வரும் காய்ச்சல், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஏற்கெனவே மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி இருப்பவர்களுக்கு, காய்ச்சலின்போது அந்த வலிகள் இன்னும் அதிகமாகும். “திடீர்னு இடுப்பு வலிக்குது, மூட்டு வலிக்குது….’ என வலியைப் பிரதான அறிகுறியாகச் சொல்லிக் கொண்டு மருத்துவரைப் பார்க்க வருவார்கள். உண்மையில், அதன் பின்னணியில் காய்ச்சல் இருக்கும்.
காய்ச்சலைத் தணிக்க பாராசிட்டமால்தான் சிறந்த மருந்து. அதை அவரவர் எடைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் 102 டிகிரியை தாண்டினால் உடல்வலி, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பலவீனம், தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்காதது போன்றவை சேர்ந்துகொள்ளும். தண்ணீர்கூட பிடிக்கவில்லை என்பதற்காக அதை அறவே தவிர்ப்பது ஆபத்தானது. ‘நான்- கார்பனேட்டடு’ (Non-Carbonated ) பானங்களை, குளிர்ச்சியின்றி குடிக்கலாம். மாம்பழம், லிச்சி, க்ரான்பெர்ரி என வாய்க்குப் பிடித்த சுவையில் இதைக் குடிக்கலாம். டீ, பால், அரிசி நொய்க் கஞ்சி போன்றவற்றையும் சிறந்த உணவுகள்.

காய்ச்சல் குறையும்போது வியர்க்கும். அந்த வியர்வையின் மூலம் நாம் இழக்கும் நீர்ச்சத்து மற்றும் உப்பை ஈடுகட்டவும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். காய்ச்சலின்போது தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படையான விஷயம். அதனால்தான் காய்ச்சல் மிக அதிகமாகி, உடல் சோர்வாகி மருத்துவரை அணுகும்போது குளுக்கோஸ் ஏற்ற அறிவுறுத்துகிறார்கள். குளுக்கோஸ் ஏற்றியதும் உடல் இன்ஸ்டன்ட் எனர்ஜி பெறுவதை உணர்வதன் பின்னணியும் இதுதான். ஆரம்பநிலை காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
5 நாள்களுக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்தாலோ, 102 டிரிக்கு மேல் காய்ச்சல் அதிகரித்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து கொள்வதுதான் சரியானது. மருத்துவர் அந்தந்த சீசனில் பரவும் காய்ச்சலின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து டெங்கு, மலேரியா, டைபாய்டு, கொரோனா போன்றவற்றுக்கான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். டெங்கு காய்ச்சலில் தட்டணுக்கள் குறையும். அது ஆபத்தான நிலை என்பதால் காய்ச்சல் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் பிளட் கல்ச்சர், யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளும் பரிந்துரைக்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.