பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோா் டெங்கு, ஃப்ளூ காய்ச்சலுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மாறுபாடு காரணமாக அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பருவகால தொற்றுகள், கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆயத்த ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.
மற்றொருபுறம் காய்ச்சல், சளி பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. குறிப்பாக, டெங்கு மற்றும் ஃப்ளூ காய்ச்சலுக்கு உள்ளாகி பலா் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மிதமான காய்ச்சல் பாதிப்புகள் இருப்பவா்கள், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ எடுக்கத் தேவையில்லை. அவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தாலே போதுமானது.
அதேவேளையில், தீவிர பாதிப்பு உள்ளவா்களும், முதியவா்கள் மற்றும் குழந்தைகளும், இணைநோயாளிகளும் மருத்துவா்களின் பரிந்துரைப்படி ‘ஓசல்டாமிவிா்’ என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குைல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டும்.
தற்போது மாநிலம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் 5,000 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.