கார்டூன் தொடர்களை வெளியிட்டு பிரபலமடைந்த கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்பட உள்ளதாகத் தகவல்.
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தால் 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கார்டூன் நெட்வொர்க் சேனல் சில ஆண்டுகளிலேயே உலகம் முழுக்க பிரபலமடைந்தது.
குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் தொலைக்காட்சி விற்பனை அதிகரிக்கத் துவங்கிய காலம் என்பதால் 90-களில் பிறந்த குழந்தைகளின் விருப்பமான சேனலாக கார்டூன் நெட்வொர்க் இருந்தது.
அதில், வெளியிடப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி (tom and jerry), ஸ்கூபி டூ (soopy too), பென் 10 உள்ளிட்ட கார்டூன் தொடர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், கார்டூன் நெட்வொர்க் விரைவில் மூடப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எக்ஸ் தளத்தில் பலரும் ஆர்ஐபி கார்டூன் நெட்வொர்க் (RIP cartoon network) என தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், கார்டூன் நெட்வொர்க் நிறுவனம் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.