சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே இன்று அதிகாலை கரையைகடக்கக்கூடும். இதன் காரணமாக, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்ததாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ.தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கி.மீ.தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் இன்று (அக்.17) கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்றுவட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (அக்.17) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (அக்.18) திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
வட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது.இதன் காரணமாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது. நேற்றுகாலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ., செங்குன்றத்தில் 28 செ.மீ., ஆவடியில் 25 செ.மீ., கத்திவாக்கத்தில் 23 செ.மீ.,மணலியில் 21 செ.மீ., திரு.வி.க. நகரில் 19 செ.மீ., கொளத்தூர், அடையாறு, புழல் அம்பத்தூரில் 18 செ.மீ.,திருவொற்றியூர், எண்ணூர், காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் 17 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
வட தமிழக கடலோர பகுதிகளில்இன்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.