புதுடெல்லி: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது.” எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து வடகிழக்கே 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு: இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். 22 முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.