பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டாலும், கம்குவாம்பாவின் கற்கும் ஆர்வம் ஒருபோதும் குறையவில்லை. அறிவைத் தேடி உள்ளூரில் இருந்த ஒரு சிறிய நூலகத்திற்குச் செல்லத் தொடங்கினார். அங்கு Using Energy (ஆற்றலைப் பயன்படுத்துதல்) என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தார்.
அவருக்கு ஆங்கிலம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், அதில் இருந்த காற்றாலைகளின் படங்கள் அவருக்கு ஒரு புதிய திறப்பைக் கொடுத்தன.
காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கலாம், அந்த மின்சாரத்தைக் கொண்டு நீரேற்றி (Water pump) விவசாயம் செய்யலாம் என்பதை அவர் உணர்ந்தார். தனது கனவை நனவாக்கக் களமிறங்கிய வில்லியமிடம் எந்தவொரு தொழில்நுட்ப உபகரணங்களும் இல்லை.
அவர் குப்பை மேடுகளை நோக்கிச் சென்றார். உடைந்த சைக்கிள் பாகங்கள், பழுதடைந்த டிராக்டர் ஃபேன்கள், பிளாஸ்டிக் பைப்புகள், மரத்துண்டுகள் ஆகியவற்றைச் சேகரித்தார்.
“இவன் ஒரு பைத்தியம்” என்று ஊர் மக்களும் நண்பர்களும் அவரைக் கேலி செய்தனர். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. விடாமுயற்சியுடன் சுமார் 5 மீட்டர் உயரமுள்ள ஒரு காற்றாலையை உருவாக்கினார்.
அந்தக் காற்றாலை சுழன்று, அதில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பல்பை எரிய வைத்தபோது, அவரைப் பார்த்துச் சிரித்த கிராமமே வியப்பில் ஆழ்ந்தது. பின்னர் அதை மேம்படுத்தி, தனது வீட்டின் 4 பல்புகள் மற்றும் ஒரு ரேடியோவை இயக்கும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கினார். வறுமையில் இருண்டு கிடந்த அவரது வீட்டிற்கு அது ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது.