“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” ஆதவ் அர்ஜூனாவுக்கு ரஜினி பதிலடி – Kumudam

Spread the love

கடந்த 12-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதே திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது. 

அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது” என்று கூறியிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆதவ் அர்ஜுனாவின் கருத்து எதிராக திமுக, அதிமுக, பாஜக என பல கட்சி தலைவர்களும் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், 

தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத் துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!” என்று அதில்  கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *