காலையில் காணாமல் போன குழந்தை மாலையில் ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை பார்த்த பெற்றோர் | Missing in the Morning, Found Begging by Evening: Parents Shocked

Spread the love

மும்பையில் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதிலும், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் சில டாக்டர்களே நேரடியாக ஈடுபட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள மேக்வாடியில் வசிப்பவர் சுக்ராம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது 9 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள். சுக்ராம் தனது உறவினர்கள் துணையுடன் மகளை தேடி வந்தார். பிற்பகல் 1 மணிக்குத்தான் சிறுமி காணாமல் போனாள்.

காணாமல் போன சிறுமி அந்தேரி ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை சுக்ராமின் உறவினர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் சுக்ராமிற்கு தகவல் தெரிவித்தனர். அதுவும், சிறுமி காணாமல் போன அன்று மாலை 7 மணிக்குச் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.

இதுகுறித்து சுக்ராம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். அச்சிறுமியுடன் 17 வயது பெண் ஒருவர் இருந்தார். அவர்தான் சிறுமியை பிச்சை எடுக்க வைத்திருந்தார்.

சிறுமி கடத்தல்

சிறுமி கடத்தல்

அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து சுக்ராம் கூறுகையில்,
“எனது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள். சில மணி நேரம் கழித்து, எனது மகள் ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை எனது உறவினர்கள் பார்த்து தகவல் கொடுத்தனர். உடனே சென்று அவளை மீட்டோம்.

எனது மகளுடன் இருந்த நபர் எங்களது பகுதியைச் சேர்ந்தவர்தான். எனது மகளிடம் விசாரித்தபோது, விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்லேட் கொடுத்து, காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வரும்படி கூறியிருந்தார்.

அவள் சேகரித்து வந்த பாட்டில்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்துள்ளார். அதோடு ‘பசிக்கிறது, வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று எனது மகள் கூறியபோது, அவளை மாகிம் தர்காவிற்கு அழைத்து சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து அந்தேரி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்துள்ளார்.

எப்படி பிச்சை எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்துள்ளார்,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *