பாராளுமன்றத தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) 3-ம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா, சத்திஷ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
இதில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ்தலைவர் கார்கே ஆகியோர் வாக்களித்தனர்.
கால்களால் வாக்களித்த வாலிபர்
இந்தநிலையில் குஜராத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது கால்விரலால் வாக்களிக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் இதயங்களை வென்று வேகமாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நாடியாட் என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் 2 கைகளையும் இழந்த அங்கித் சோனி என்ற வாலிபர் தனது கால்களால் வாக்களித்தார்.
அவருக்கு கால் விரலில் அழியாத மையும் வைக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கியதில் அங்கித் சோனி தனது இரு கைகளையும் இழந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது அத்தியாவசிய பணிகளுக்கு கால்களை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலவமையிலும் அவர் மனதை தளரவிடவில்லை.
அவர் அதிக முயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்து எம்பிஏ பட்டம் பெற்று உள்ளார்.
இதுகுறித்த அங்கித் சோனி கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இரண்டு கைகளையும் இழந்தேன். எனது ஆசிரியர்கள் மற்றும் குருவின் ஆசியுடன் பட்டப்படிப்பை முடித்தேன். மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்றார்.