போடி: மலைப்பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்தால்தான் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காடுகளில் மேய்ச்சல் உரிமை கோரி தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் இன்று (ஆக.3) நடைபெற்றது. இதற்காக ஏராளமான நாட்டு மாடுகள் அழைத்து வரப்பட்டன. இருப்பினும் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயல்வதாகக் கூறி சீமானை போலீஸ் மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: “இலங்கையில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இனப் படுகொலை நடக்கிறது. இலங்கையில் குண்டுகளை வீசி இனப் படுகொலை செய்தனர். ஆனால் தமிழகத்தில் மது குடிக்க வைத்து இனப் படுகொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் நடந்ததும், தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தொடர்ந்து லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள், கனவுகள் எங்களிடம் உள்ளன.
அதனை நிறைவேற்ற கூடி வாருங்கள் ஓடி வாருங்கள் என் மக்களே. ஆடு, மாடுகள் மேய்ப்பது தொழில்முறை அல்ல. அது எங்களது வாழ்க்கை முறை. கலாச்சாரம், பண்பாடு. மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள். மேய்ச்சல் வன நிலம் என்பது எங்களது உரிமை. ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும்.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கூரிய கொம்புகள் இருந்தும் மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப் பகுதி, வனப் பகுதியில் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும்.
மலைகளை பாதுகாக்க வேண்டுமெனில் அங்கு ஆடு, மாடுகள் மேய வேண்டும். நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு, மாடு இன்றி அமையாது காடு” என்று சீமான் பேசினார்.