சென்னை: பணியிட மாறுதல் ஆணை வழங்கிய விவகாரம் சர்ச்சையான நிலையில், பெண் மருத்துவர் ஒருவரின் பணியிட மாறுதலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றி வரும் கால்நடை உதவி மருத்துவர்கள் 26 பேரை நிர்வாக காரணம் என்ற வகையில் 17 10 2025 அன்று அப்போதைய இயக்குனர் கண்ணன் ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். சிலர் 600 கிலோ மீட்டர் தொலைவில் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
இதில் 16 நபர்கள் தனிப்பட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் என்பதால் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தவர்களை மிரட்டும் வகையில், இந்த பணியிட மாறுதல் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.
இந்த பணியிட மாறுதலை எதிர்த்து பாதிக்கப்பட்ட டாக்டர் ஈஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடுத்தவர்களை பழிவாங்கும் நோக்கில் நிர்வாக காரணம் என்ற பெயரில் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் பணியிட மாறுதல் ஆணையில் குற்றச்சாட்டுகள் மற்றும் எந்த விதமான நிர்வாக காரணமும் குறிப்பிடப்படவில்லை என்பதால் பணியிட மாறுதல் ஆணை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரை தொடர்ந்து ஏற்கெனவே பணி செய்த இடத்தில் பணிபுரிய அனுமதிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இழப்பீடு வழங்க நேரிடும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.