புது தில்லியில், கடந்த மாதம், கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண்ணின் உடலை அடையாளம் காண அவர் அணிந்திருந்த மூக்குத்தி உதவியிருக்கிறது.
ஒரு மாத காலமாக பெண்ணின் அடையாளம் தெரியாமல், இவர் யார், எப்படி கொலை செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அவர் அணிந்திருந்த மூக்குத்திதான் துருப்புச்சீட்டாக மாறியிருக்கிறது. இவ்வழக்கில் பெண்ணின் கணவர் அனில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 15ஆம் தேதி போர்வையால் சுற்றப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கல் மற்றும் சிமெண்ட் பலகையுடன் கட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்டிருந்தது. உடலைக் கைப்பற்றிய காவல்துறை, அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
பிறகு, அவர் அணிந்திருந்த மூக்குத்தியை எடுத்து, அது எந்தக் கடையில் விற்பனை செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அங்கு இந்த மூக்குத்தி யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற பதிவைக் கண்டுபிடித்த போது, அந்த மூக்குத்தியை தில்லியைச் சேர்ந்த சொத்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த அனில் குமார் என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருந்ததும், அவர் குருகிராமில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்ததம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், கைப்பற்றப்பட்ட பெண் சீமா சிங் (47) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.