ஜார்க்கண்ட்டில் கடந்த மாதம் நடைபெற்ற காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 15 தேர்வர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகையை அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று(அக். 7) வழங்கினார்.
ஜார்க்கண்ட் காவல்துறையில் சுமார் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம் 7 மையங்களில் நடைபெற்றது. உடற்தகுதித் தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் பலர், வெயிலில் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 15 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே தேர்வர்கள் உயிரிழப்புக்கான காரணமென எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
காவலர் பணியில் சேரும் கனவுடன் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வருத்தம் தெரிவித்திருந்ததுடன், இச்சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிப்பதாய் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு இன்று நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.