சென்னையில் கைதியை சிறைக்கு அழைத்துச் சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் காவலர் வாகனத்தில் மது அருந்திய விடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீஸார் கைது செய்த பின்பு, அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வது மற்றும் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணிகளில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை மாநகரத்தில் இரண்டு இடங்களில் ஆயுதப்படை இயங்கி வருகிறது. சென்னை புதுப்பேட்டை மற்றும் பரங்கிமலையில் இயங்கி வருகிறது. இதில் சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படையில் லிங்கேஸ்வரன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதையும் படிக்க: அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்த நிலையில், கைதிகளை அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனத்தில் அமர்ந்துக் கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் காவல் துறை சீருடை அணியாமல் மது அருந்தும் விடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் வாட்ஸ்ஆப் குழுவிலும் பரவி உள்ளது.
இதையடுத்து விடியோவை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை உயர் அதிகாரிகள் சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரனிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.