சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (21.10.2025) சென்னை காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காவலர் வீரவணக்க நாள் விழாவில், தமிழக முதல்வர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனையொட்டி, 175 காவலர் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், வழங்குவதின் அடையாளமாக 20 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பணியின் போது உயிரிழந்த பல்வேறு காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு மொத்தம் ரூ.5.70 கோடி காப்பீட்டுத் தொகை மற்றும் கருணைத் தொகையையும் வழங்கினார்.