சென்னை: “தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்?” என மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.
தமிழகம் தற்போது, 2006 – 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதல்வர் உணர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை விளக்கம்: இதற்கிடையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்டதால் கொலை நடைபெறவில்லை முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடந்தது என்ன? மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளி வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுவனை ராஜ்குமார் தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டதைக் கண்ட ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் சேர்ந்து ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.