காவல் துறைக்கு அழுத்தம் தருகிறது அரசு: சீமான்

Dinamani2f2025 02 282fi82cerpt2fseeman Press Meet Edi.jpg
Spread the love

காவல் துறை விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் இல்லை என்றும் பழைய கேள்விகளே கேட்கப்பட்டதாகவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு காவல் துறையில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 24-ஆம் தேதி வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

ஆனால், அழைப்பாணையின்படி வியாழக்கிழமை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக வழக்குரைஞா்கள் ஆஜராகி சீமான் விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கு விளக்கம் அளித்து, அவா் ஆஜராக நான்கு வாரம் அவகாசம் கேட்டனா்.

இதையடுத்து, சீமான் வெள்ளிக்கிழமை (பிப். 28) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் வாயில் கதவில் வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணையை வியாழக்கிழமை ஒட்டினா். இது ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் சீமான் காா் ஓட்டுநா் சுபாகா், அந்த அழைப்பாணையை கிழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், காவலா் செளந்தரராஜன் உள்ளிட்டோா் விசாரணை செய்ய நீலாங்கரை சந்தீப் சாலை பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்குச் சென்றனா்.

தள்ளுமுள்ளு: சீமான் வீட்டின் கதவைத் திறந்த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் காவலாளியுமான அமல்ராஜ், ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ் உள்ளிட்டோரைத் தடுத்தாா். இதைப் பாா்த்து கோபமடைந்த போலீஸாா், அவரை வீட்டுக்குள் இழுத்துச் சென்றனா். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

உடனே போலீஸாா் அமல்ராஜை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அப்போது அமல்ராஜ், தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த உரிமம் பெற்ற 0.32 ஜிஎஸ்என் வகையைச் சோ்ந்த கைத்துப்பாக்கியையும்,தோட்டாக்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில், சென்னையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப்பின் வெள்ளிக்கிழமை (பிப். 28) இரவு சீமான் செய்தியாளர்களுடன் பேசினார்.

சீமான் பேசியதாவது : ”காவல் துறை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உரிய விளக்கமளித்துள்ளேன். தேவைப்படும்பட்சத்தில் காவல் துறை விசாரணைக்கு மீண்டும் ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார்கள். எனக்கு சம்மன் வீட்டுக்கு கொண்டுவந்து தந்தனர்.

என் வீட்டுக்கு காவலாளிகள் பணியில் யாரும் அமர்த்தப்படவில்லை. என் வீட்டில் காவல் பணியிலிருந்தவர் என் மீதான பாசத்தால் எனக்குரிய பாதுகாப்பை அளித்து வந்தவர். அவர் ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரராவார். அவர்களை காவல்துறை அடித்து துன்புறுத்தியது தவறு” என்றார்.

மேலும், சீமான் பேசுகையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் குறிப்பிட்டு ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, விஜய் தன்னையோ தன் கட்சியையோ விமர்சிக்கவில்லை என்றும், விஜய் மீது அன்பு தமக்கு எப்போதும் உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வழக்கால் மன உளைச்சல்

தன் மீதான பாலியல் வழக்கு தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் சீமான்.

இது குறித்து அவர் பேசுகையில், ”எனக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றன. இப்போது எனது மூத்த மகனுக்கு பகுத்தறியும் பக்குவமும் வந்துவிட்டது. அப்படியிருக்கையில், நான் ஒரு பெண்ணை கொடூரமாக வன்புணர்வு செய்ததாக மிகைப்படுத்தி காட்டுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இதனால் நான் சார்ந்த கட்சியிலுள்ள உடன் பிறப்புகளும் மன வேதனையடைந்துள்ளனர். மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் என்னை இப்படியும் கேவலப்படுத்துவதா?” என்றார்.

நள்ளிரவில் விசாரணை நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய சீமான் அதனைத்தொடர்ந்து, பாலவாக்கத்திலுள்ள தமது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *