காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்க மாநில, மாவட்டம், மாநகர் அளவில் தனிக் குழு: தமிழக அரசு தகவல் | Special Committee to Investigate Complaints Against Police Officers: Information in High Court

Spread the love

மதுரை: தமிழகத்தில் காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்க மாநிலம், மாவட்டம் மற்றும் மாநகர் அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள், அதீத காயம் விளைவித்தல், பாலியன் வன்கொடுமை போன்ற சம்பவங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க உச்ச நீதிமன்றம் 2006-ல் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுப்படி தமிழகத்தில் குழு அமைக்கவில்லை. எனவே, தமிழகத்தில் காவல் துறையினர் மீதான பகார்களை விசாரிக்க மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “தமிழகத்தில் மாநில அளவில் தமிழக உள்துறை செயலர் தலைமையில் தமிழக டிஜிபி, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆகியோர் கொண்ட குழுவும், சென்னை தவிர்த்து பிற மாநகரங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மூத்த துணை ஆணையர் ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மூத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழுவும், சென்னை பெருநகரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டு 2019-ம் ஆண்டிலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்டு நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *