சுங்குவார்சத்திரம்: “சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரை இன்று அல்லது நாளை நேரில் சந்தித்து, இனிமேலும் இந்தப் பிரச்சினை நீடிக்காமல் ஒரு சுமுகமான முறையில் இப்போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம். நிச்சயமாக முதல்வர் இதில் தலையிட்டு, சுமூகத்தீர்வு காண்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அதேநேரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். இந்நிலையில், இந்தப் போராட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர். இந்நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர், அவர்கள் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கே.பாலகிருஷ்ணன் கூறியது: “கடந்த மாதம் 9ம் தேதி முதல் இன்று (அக்.9) வரை, ஒரு மாத காலமாக சாம்சங் ஆலையில் பணியாற்றக்கூடிய 1,500-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள், சில அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். பலகட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகும், சுமுகமான தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்றைக்கும் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிற்சங்கத் தலைவர்களைப் பொறுத்த வரையில், முதல்வர் தலையிட்டு மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து, இந்த சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வுகாண வலியுறுத்தினார். அமைச்சர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமூகத்தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது. ஆனால், மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியப்பிறகும், பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படாமல், அது நீடித்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த ஒருமாத காலமாக எந்த தொழிலாளிகள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த தொழிலாளர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண்பதற்கு மாறாக, சாம்சங் நிறுவனத்தில் ஏற்கெனவே வேலைக்குச் சென்று, அரசுக்கு எடுபிடியாக இருக்கக்கூடிய சிலருடன் அமைச்சர்கள் பேசி, உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக அறிவிப்பது என்பது ஒரு நல்ல ஜனநாயக நடைமுறை இல்லை. இதனால், அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும்கூட, இன்றைக்கும் போராட்டம் தொடர்ந்துள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை அடைத்து வைத்திருக்கக்கூடிய மண்டபத்தில், மின்விசிறி கூட கிடையாது. ஒரு 7-8 தொழிலாளர்களை கைது செய்து வேலூர் சிறையில் ரிமாண்ட் செய்துள்ளனர். தொழிலாளர்களுக்கு எதிராக கடைபிடிக்கக் கூடிய இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஆரோக்யமானது இல்லை. ஜனநாயகப்பூர்வமான நடவடிக்கை அல்ல. இந்த அரசுக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் நல்ல பெயரை ஈட்டித்தராது. எனவே, தோழமைக் கட்சிகளைச் சார்ந்துள்ள நாங்கள், தொழிலாளர்களைச் சந்தித்து ஆறுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்தோம்.
இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரை இன்று அல்லது நாளை நேரில் சந்தித்து, இனிமேலும் இந்த பிரச்சினை நீடிக்காமல் ஒரு சுமுகமான முறையில் இப்போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம். நிச்சயமாக முதல்வர் இதில் தலையிட்டு, சுமூகத்தீர்வு காண்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அதேநேரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அமைதியான முறையில் தொழிலாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த பந்தலை காவல் துறை பிரித்து எறிய வேண்டிய அவசியம் என்ன?
அமைதியான முறையில் போராடக்கூடிய தொழிலாளர்கள் மீது இதுபோல அடக்குமுறையை ஏவுவது, இரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து கைது செய்வது, இதுபோன்ற காவல் துறையின் போக்கு நல்லதல்ல. இவை வன்மையான கண்டனத்துக்குரியது. இதுபோன்ற அடக்குமுறைகளால், தொழிற்சங்கங்களின் எந்தவொரு போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது,” என்று அவர் கூறினார்.