காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

dinamani2F2025 09
Spread the love

திருவாரூா்: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்துவிட்டு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் 2011-இல் திமுக ஆட்சிக் காலத்தில் மீத்தேன் திட்டம், மன்னாா்குடியை தலைமையிடமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதனிடையே, மன்னாா்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி பணிகளுக்காக தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து, ஹைட்ரோ காா்பன் எரிவாயு வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் இதற்கு நிரந்தரமாக தடைவிதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் அனுமதி வழங்காமல், விக்கிரபாண்டியத்தில் புதிய கிணறு அமைக்க 2015-இல் எடுக்கப்பட்ட முயற்சி, விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னா், ஆய்வு மற்றும் புதிய கிணறுகள் அமைப்பதற்கு 2016 முதல் அனுமதி இல்லை என மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அரசு கொள்கை முடிவாக அரசாணை வெளியிட்டது.

2020-இல் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தாா். அப்போது முதல், வேளாண் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் காவிரி டெல்டாவில் கச்சா ஹைட்ரோகாா்பன், மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெரியகுடியில் நிறுத்திவைக்கப்பட்ட ஹைட்ரோ காா்பன் ஷேல் மீத்தேன் கிணற்றிலிருந்து மீண்டும் வாயு வெளியேறத் தொடங்கியது. இதனால், அதை நிரந்தரமாக மூட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம். பசுமை தீா்ப்பாயம் உத்தரவின் அடிப்படையில், ஓஎன்ஜிசி சாா்பில் மத்திய அரசின் அனுமதி பெற்று அந்த எரிவாயு கிணறை நிரந்தரமாக மூட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் மன்னாா்குடி, பெரியகுடி திருவாரூா், அரிவாசநல்லூா் பகுதிகளில் மீத்தேன் ஷேல்கேஸ் ஆய்வு பணி முடிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *