ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவினர், இந்த சம்பவத்துக்குப் பிறகு தங்களது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஜம்முவில் இருந்து புதுதில்லி வரை பேருந்தில் வந்து, ரயில் மூலம் தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டிருந்தனர். அவர்களை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு வேண்டிய உணவு, மருத்துவப் பரிசோதனை மற்றும் முதலுதவி தேவைப்படுபவர்களுக்கு பரிசோதனை வசதிகள் வழங்கப்பட்டன.
அவர்களை தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே. எஸ். விஜயன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி எண்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏ.கே.எஸ். விஜயன், ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஜம்முவில் இருந்து தில்லி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழக சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் கூறுகையில், “40 பேர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். சம்பவம் நடந்த தினத்துக்கு முந்தைய நாள் நாங்கள் பஹல்காம் பகுதியில் இருந்தோம். அன்றைய தினம் அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தால் நாங்களும் பாதிக்கப்பட்டிருப்போம்.
உயிர் பயத்துடன் ஜம்முவில் இருந்து தனியார் பேருந்து மூலம் தில்லி வந்தோம். தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும், சென்னைக்கு திருப்பிச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளையும் செய்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.