காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

Dinamani2f2025 03 232fr0l0i32z2fgaza Kills.jpg
Spread the love

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போா், கடந்த ஜனவரியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட இருந்தது. இதன்படி, முதல்கட்டத்தில் 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

போா் நிறுத்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கப்படாத நிலையில், நிரந்தரப் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைக்கு முன்பாக, கூடுதலாகப் பிணைக் கைதிகளை விடுவிக்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் பரிந்துரையை ஹமாஸ் ஏற்கவில்லை. இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலை அண்மையில் மீண்டும் தொடங்கியது.

50,021 போ் உயிரிழப்பு: காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் ஹமாஸ் அரசியல் தலைவா், பெண்கள், சிறாா்கள் அடங்குவா்.

இதன்மூலம், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது. போரில் இதுவரை 50,021 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. வடக்கு காஸாவுக்குள் இஸ்ரேலின் படைகள் தரைவழி ஊடுருவலைத் தொடங்கியுள்ளன.

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற…: காஸாவில் இருந்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அதை உலக மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்வைத்துள்ளாா்.

அதற்கு ஏற்ப காஸாவில் இருந்து பாலஸ்தீனா்களே ‘தாமாக முன்வந்து வெளியேறுவதை’ துரிதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய இயக்குநரத்தை அமைக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் காஸாவில் இருந்து வெளியேற தங்களுக்கு விருப்பமில்லை என்று பாலஸ்தீனா்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ஏவுகணை வீச்சு: பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மீது ஏவுகணையை ஏவினா். எனினும் அதை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *