ராமநாதபுரத்தில் `கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நாதகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் `கிங்டம்’ திரைப்படம் கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு காட்சிகள் அமைந்திருப்பதாக கூறி இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திரைப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரத்தில் `கிங்டம்’ திரையிடப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கை முற்றுகை யிட நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் திரையரங்க நுழைவுவாயில் முன் முழக்கமிட்டவாறு முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, சிலர் திரையரங்கு முன் மறியலில் ஈடுபட்டனர். அதனால் கட்சி நிர்வாகிகள் வெங்குளம் ராஜூ, கண் இளங்கோ உள்ளிட்ட 35 பேரை போலீஸார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சியில்…- திருச்சியில் நாதக மேற்கு தொகுதி மண்டலச் செயலாளர் கேசவன், கொள்கைப் பரப்பு மாநிலச் செயலாளர் அசுரன் சரவணன், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 30-க்கும் அதிகமான அக்கட்சியினர், வில்லியம்ஸ் சாலையில் உள்ள திரையரங்குக்கு இன்று காலை சென்று, கிங்டம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என திரையரங்க மேலாளரிடம் வலியுறுத்தினர். மேலும், திரைப்படத்தை திரையிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு: இதனிடையே, ‘கிங்டம்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் முகமது காஜா மைதீன் தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கட்சியினர் அளித்த மனுவில், ‘சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள கிங்டம் திரைப்படத்தில், ஈழத் தமிழர்களை குற்றப் பரம்பரை போல சித்தரித்து தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றை திரித்து, ஈழத் தமிழர்கள், மலையக தமிழர்களை ஒடுக்குவது போன்ற காட்சிகள் உள்ளன. எனவே, கிங்டம் திரைப்படத்தை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகமது காஜா மைதீன் கூறும்போது, “ஆந்திராவில் இருந்து குடிபெயர்ந்து, இலங்கையின் ஜாப்னாவிற்கு வாழ்வதற்காக, தெலுங்கு பழங்குடியினர் செல்வது போலவும், அவர்களை அங்குள்ள ஈழத் தமிழர்கள் அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிரான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இதை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அம்மாநில மக்களை இழிவுபடுத்தி திரைப்படங்களை வெளியிட முடியுமா? இந்த திரைப்படம் உருவாகும்போதே ஐந்து மொழிகளில் உருவாகும் என்பது தெரிந்தும், காப்புரிமை பெறும்போது இது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி ஏன் வெளியிடவில்லை ? இது போன்ற படங்கள் வெளியாவதை அரசுகள் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.