சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ள நிலையில், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற எம்எல்ஏக்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று கரூர் துயரம், கிட்னி திருட்டு விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து, இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் பாஜக, அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பேரவைக் கூட்டத்தில் கிட்னி திருட்டு விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து, ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். பாமக அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.