கரூர் துயரச் சம்பவம் மற்றும் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடர் ஆகியவற்றில் தனது அசராத நடவடிக்கைகள் மூலமாகதாங்கள் தான் நிஜமான எதிர்க்கட்சி என்பதையும், இதுதான் எதிர்க்கட்சியின் பலம் என்பதையும் மற்றவர்களுக்குப் புரியவைத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது சாதுர்யமான தொடர் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை மக்கள் மன்றத்தில் நிலைநிறுத்தி, எத்தனை கட்சிகள் வந்தாலும் என்றைக்குமே திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்று காட்டியிருக்கிறார் பழனிசாமி.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்த பழனிசாமி, இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவாகி இருப்பதை தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறார். அதேசமயம் பழனி சாமிக்கு இருந்த சில அரசியல் நெருக்கடிகளையும் கரூர் விவகாரம் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.
திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று மார்தட்டி நின்ற தவெக, கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஸ்லீப்பிங் மோடுக்குப் போய்விட்டது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தினமும் திமுக அரசைக் கண்டித்து அறிக்கை, பிரச்சாரம், பேட்டி என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் பழனிசாமி.
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில், கரூர் சம்பவம், கிட்னி திருட்டு, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகிய வற்றை 3 நாள்களும் வரிசையாக முன்னிறுத்திப் பேசி திமுக அரசை சங்கடத்துக்கு உள்ளாக்கினார் பழனிசாமி. கிட்னிகள் ஜாக்கிரதை, உருட்டுக் கடை அல்வா என்பதெல்லாம் பழனிசாமியின் வேறலெவல் அரசியலாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற குரல்களையும் கூட இப்போதைய தனது ஆக்கபூர்வ எதிர்க்கட்சி நடவடிக்கைகளின் மூலம் சற்றே அமுங்கிப் போகச் செய்திருக்கிறார் பழனிசாமி. கரூர் சம்பவத்துக்குப் பிறகான தனது பிரச்சாரங்களில், அதிமுக கூட்டணியில் தவெகவும் சேரப் போகிறது என்பது போல் வெளிப்படையாகவே பேசிவருகிறார் பழனிசாமி.
இதற்கு தவெக தரப்பில் ஏவ்வித ஆட்சேபனைகளும் வராததும் இரு கட்சித் தொண்டர்களின் கவனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. பழனிசாமி எதிர்பார்ப்பது போல் அதிமுக கூட்டணியில் தவெக இணைந்துவிட்டால் மற்ற கட்சிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவசியம் அதிமுக கூட்டணிக்கு ஏற்படாது.
அதேபோல், பிரிந்து சென்றவர்களைக் கட்சிக்குள் சேர்த்தால் தான் கட்சிக்கு பலம் என்ற கொடிபிடிப்புக் கோஷங்களும் காணாமல் போய்விடும். ஆக, தாங்கள் தான் திமுக-வுக்கு மாற்று என்று சொல்லிவந்த தவெகவுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவதன் மூலமும் அவர்களைத் தங்கள் கூட்டணிக்குள்ளேயே இழுத்துப் போட முயற்சிப்பதன் மூலமும் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறார் பழனிசாமி.