சென்னை: “கிட்னி திருட்டு விவகாரத்தில், எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், புகார் வந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3-வது நாளாக இன்று நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில், அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், தமிழக சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் வினித் ஐஏஎஸ் அவர்களிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், தவறான சான்றிதழ்களை வழங்கியதும், சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்சி பகுதிகளில் கள ஆய்வை இந்த குழுவினர் மேற்கொண்டனர். கிட்னி திருட்டு புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, திருச்சி சிதார் ஆகிய மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், புகார் வந்த மருத்துவமனைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது மாதிரியான குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. அப்போது இருந்த அரசு எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
குற்றம் நடந்தது எந்த மருத்துவமனையாக இருந்தாலும், யாருடைய மருத்துவமனையாக இருந்தாலும் உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். அதனடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படும் ஸ்டாலின் மோகன், ஆனந்தம் ஆகிய இருவரின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்பட்டு, அந்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தானம் எனும் பெயரில் உடல் உறுப்பை விற்கக்கூடாது என ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிட்னி மோசடி தொடர்பாக 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.