கிட்னி விற்பனை புகார்: பள்ளிபாளையத்தில் நாமக்கல் மாவட்ட மருத்துவக் குழு விசாரணை | Kidney Sale Complaint on Namakkal and Health Services Joint Director Investigates

1369759
Spread the love

நாமக்கல்: கிட்னி விற்பனை புகார் தொடர்பாக பள்ளிபாளையத்தில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் விசைத்தறிக் கூடங்கள், சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் உள்பட வறுமையில் உள்ள பலரை குறிவைத்து, சிலர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கர்களாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியின் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் போலீஸார் பள்ளிபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறுகையில், ”பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரில் உள்ள ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கராக செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது ஆனந்தன் இல்லை. அங்கு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 6 மாதங்களாக இங்கு தங்கியிருப்பதும் தெரியவந்தது.

எனினும், ஆனந்தன் தலைமறைவானதால், அவர் மீது பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை அலுவலர் வீரமணி மூலம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் பிடிபட்டால் மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று ராஜ்மோகன் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *