கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளலாம்: ஐகோர்ட் அனுமதி | High Court orders rainwater harvesting project on land acquired from Guindy Race Club

1380546
Spread the love

சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் மழை நீரை சேமிப்பதற்கான குளங்களை அமைக்கும் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களையும் பொதுநலன் கருதி மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது

இதையடுத்து,குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும், நிலத்தை அரசு சுவாதீனம் செய்ததை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, ஏற்கெனவே உள்ள நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஏற்கெனவே இந்த வழக்கில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்து உத்தரவு பிறப்பித்ததால் இந்த வழக்கை அவர் விசாரிக்க கூடாது என்றும் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழக அரசின் வருவாய் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஏற்கெனவே விசாரித்த வழக்கு வேறு வகையான வழக்கு என்றும் இந்த வழக்கு வேறு என்றும் தொடர்ந்து இதே அமர்வு விசாரிக்கலாம் என்றும், நிலத்தின் தற்போதைய மதிப்பு 6500 கோடி ரூபாய் எனவும், வாடகை பாக்கி 1200 கோடி நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை நீக்க வேண்டும் என்றும் பொது நலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் திட்டங்கள் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு ரத்து செய்து தமிழக அரசு பொதுநலன் கருதி திட்டங்களை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர். தற்போது மழைக்காலம் என்பதனால் திட்டம் அவசியம் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் பிரதான வழக்கை ஒத்திவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *