மகாராஷ்டிரத்தில் கிரிப்டோகரன்சி மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, மருத்துவரிடம் மோசடி செய்தவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தின் கோனி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் மருத்துவருக்கு, கடந்த வாரத்தில் மொபைல் போனில் ஓர் அழைப்பு வந்துள்ளது. அழைப்பில், தாய்லாந்தில் இருந்து பேசுவதாகக் கூறிய ஒருவர், மூன்று பாஸ்போர்ட்டுகள், மூன்று சிம் கார்டுகள், சில மருந்துகளைக் கொண்ட ஒரு பார்சல் தனக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், அந்த பார்சலின்மீது மருத்துவரின் பெயர்தான் இருப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவரிடம் கிரிப்டோகரன்சி குறித்தும் பேசியுள்ளார்.
இதனையடுத்து, கிரிப்டோகரன்சி வாங்குவதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தானும் கிரிப்டோகரன்சி வாங்குவதாக மருத்துவர் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து, மருத்துவரிடம் பேசிய அவர், சில வங்கிக்கணக்கு எண்களுக்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். மருத்துவரும் ஆக. 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு ரூ. 30,86,535 பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவரின் பணத்தைப் பெற்றுக்கொண்டவர், மருத்துவருக்குத் திரும்பிப் பதிலளிக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவல்நிலையத்தில் மருத்துவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, மோசடி தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோசடி செய்தவரை விரைவில் பிடிப்பதாகவும் மருத்துவருக்கு உறுதியளித்தனர்.