இந்த நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட ச.தினேஷ் குமாா் தெரிவித்திருப்பதாவது: இவ்விவகாரம் குறித்து நேற்றிரவு தகவல் கிடைத்தவுடன், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக மேற்கண்ட பாதிக்கப்பட்ட மாணவி பள்ளிக்கு வராததால், பள்ளி தரப்பில் நேரடியாக மாணவியிடம் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின், காவல் நிலையம் அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்பு கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்ததாகக் கூறப்படும் தவறான தகவல்களை பரப்பு வேண்டாம். இந்த வழக்கில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறையல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.