நம் பாரத தேசம் முழுமையும் விஷ்ணு ஆலயங்கள் பல உள்ளன. பழைமைவாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும் பல புதிய ஆலயங்களும் தோன்றி பக்தியை வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, ஐகுந்தம் கொத்தப்பள்ளி கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.
இந்தக் கோயில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பதியில் நடைபெறுவதைப்போலவே இந்த ஆலயத்திலும் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எனவே சுற்றுவட்டார மக்கள் இந்தக் கோயிலை, “கிருஷ்ணகிரியின் திருப்பதி’ என்றே போற்றுகிறார்கள். ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் திருப்பதி பெருமாளை வழிபட்ட திருப்தி கிடைப்பதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

27.8.2009 ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சிவலிங்கம், பத்மாவதி தாயார், வராஹ சுவாமி, ஆஞ்சநேயர், சனி பகவான் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டாக்கப்பட்டு வழிபாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆலயத்தின் சிறப்புகள் குறித்து அறங்காவலர் எம். நாகேந்திர சிங் கூறும்போது,
“இந்த ஆலயத்தில் வழிபாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மூலவரின் திருவடிகளைத் தொட்டு வணங்கலாம்” என்று கூறினார்.