கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி முதல் 2 மணி நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடந்தது. பின்னர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள் 21 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 27 பேர் வாக்களித்தனர்.
தொடர்ந்து, ஆணையாளர் சதீஷ்குமார் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தார். “தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 27 கவுன்சிலர்களும் வாக்களித்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளதால், இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய தலைவர் தேர்வு நடைபெறும் நாள் குறித்து அரசு முறையாக அறிவிப்பை வெளியிடும்.” என ஆணையாளர் தெரிவித்தார்.
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அதிமுக கவுன்சிலர் நாகஜோதி கூறும்போது, “33 வார்டுகளின் வளர்ச்சிக்காக தான் நகராட்சித் தலைவரின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வாக்களித்தேன். என்னை யாரும் கடத்தவில்லை. வார்டு மக்களின் நலனே முக்கியம்” என்றார்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து 27 கவுன்சிலர்கள் மீண்டும் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக அதிமுக கவுன்சிலர் நாகஜோதி போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துக்கு அழைத்து வரப்பட்டார்.