கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அர்ஜுனன் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் புகுந்து அவரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, `சார்… சார்… நான் அடிப்பட்டு வந்துருக்கேன் சார். என் பேரு மீனாட்சி. காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்…’ என சத்தமாக பேசினார்.
அதைத்தொடர்ந்து, ஜெகதேவி சாலைப் பகுதிக்குச் சென்றவர் அங்கு இருந்த ஆண் நபரிடம் பேசுவதை போன்ற காட்சிகளும் அர்ஜுனன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குரல் பதிவுடன் தெளிவாக பதிவாகியிருந்தன.

பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்து, அர்ஜுனனும், அவரின் மனைவியும் `கொள்ளையர்களாக இருப்பார்களோ…?’ என அச்சத்துக்குள்ளாகி, கதவைத் திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே தங்கள் மகனுக்குப் போன் செய்திருக்கின்றனர். அவரும் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்டு, `கதவைத் திறக்க வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களின் வழியாக வேகமாக பரவியதால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். உண்மைத்தன்மை அறியாமல், ஊடகங்களும் திரும்பத் திரும்ப அந்த வீடியோவை பகிர்ந்து, மக்களை பயத்திலேயே வைத்திருந்தது.