கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஸ்ரீவேட்டையாடியபிரான்: 4 திவ்ய தேசங்களை தரிசித்த பலன்தரும் தலம்

Spread the love

மகாபாரதத்தோடு தொடர்புடைய தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் புராதனமான தலங்கள் ஏராளம்.

அப்படி ஒரு தலம்தான் தேன்கனிக்கோட்டை. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். இங்கே இறைவன் ஸ்ரீவேட்டையாடிய பிரான் என்கிற திருநாமத்தோடும் தாயார் ஸ்ரீசௌந்தர்யவல்லி நாச்சியார் என்கிற திருநாமத்தோடும் அருள்பாலிக்கிறார். வாருங்கள் அத்தல மகிமைகளை அறிந்துகொள்வோம்.

புராணக் காலத்தில் பலகாலம் முனிவர்களுக்கும் மக்களுக்கும் தீமை செய்த புலி உருவில் இருந்த தேவகண்டகன் என்னும் அசுரன் சாப விமோசனம் பெற்றதலம் தேன்கனிக்கோட்டை.

பெருமாள் அவனை வதம் செய்து அவன் ஆன்மாவுக்கு முக்தி அளித்தபோது அவன் மகிழ்வோடு ‘`ஐயனே, தாங்கள் இந்தத் தலத்திலேயே கோயில் கொண்டு அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.

அதன்படி பெருமாளும் மனம் உவந்து கோயில்கொண்டு, தன்னை நாடிவந்து வேண்டுபவர்களின் பாவங்களைக் கொன்று அருள்பாலிக்கும் மூர்த்தியாக இங்கே அருள்கிறார். பெருமாள் இங்கே புலி உருவில் இருந்த அசுரனை அழித்த காரணத்தால் இங்கே பெருமாளுக்கு ஸ்ரீவேட்டையாடிய பிரான் என்பது திருநாமம்.

தேன்கனிக்கோட்டை ஸ்ரீவேட்டையாடியபிரான் கோயில் புஷ்கரணி
தேன்கனிக்கோட்டை ஸ்ரீவேட்டையாடியபிரான் கோயில் புஷ்கரணி

அழகுற அமைந்திருக்கும் திருக்கோயிலின் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலை, ஐந்து கலசங்களுடன் காட்சி தருகிறது. ஆலயத்துக்கு வெளியிலேயே சுவாமி புஷ்கரிணி என்ற தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது.

இங்கு கருவறையில் பெருமாள் சங்கு, சக்கரம், வாள் ஆகிய ஆயுதங்களை ஏந்தி நின்ற கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூமிதேவி பிராட்டியர் காட்சி தருகின்றனர்.

முகப்பு வாயிலின் தென்மேற்குப் பகுதியில் சௌந்தர்யவல்லி தாயார் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். மேலும் ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபாலர், லட்சுமணன், சீதை ஆகியோருடன் ஸ்ரீராமர், வீர ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. கண்வ மகரிஷி, மணவாள மாமுனி, எம்பெருமானார், வேதாந்த தேசிகர், பன்னிரண்டு ஆழ்வார்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

வேட்டைப்பெருமாளின் விமானத்துக்குத் தென்கிழக்கில் அமைந்திருக்கிறது சுந்தரி தீர்த்தம். சகுந்தலையின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள தீர்த்தம் இது. இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு உண்டு.

கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகளான சகுந்தலை, சுந்தரி பொய்கையின் கரையில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு, தினமும் புற்றுமண்ணால் மகாலட்சுமி தேவியின் திருவுருவம் செய்து வழிபடுவதும், பின்னர் அந்தத் திருவுருவத்தைப் பொய்கையில் விட்டுவிடுவதும் வழக்கம்.

மகாலட்சுமி

ஒருநாள், வழக்கப்படி மகாலட்சுமி திருவுருவத்துக்குப் பூஜைகள் செய்து, பூஜை செய்த பொருள்களை பொய்கையில் விட்டாள். அப்போது அந்தத் தடாகத்திலிருந்து அற்புத எழிலுடன் தோன்றிய தாமரை மலரில் மகாலட்சுமி தேவி காட்சி தந்து, ‘`சகுந்தலை, உன் வழிபாட்டில் மனம் மகிழ்ந்தேன். நீ விரும்பிய படியே கணவனை அடைவாய். அவன் மூலமாக நீ பெறப்போகும் மகனின் பெயரே இந்தப் புண்ணிய பூமிக்கு நிலைத்திருக்கும்’’ என்று வரம் அருளினார்.

அதேபோல் சகுந்தலை துஷ்யந்தனை கணவனாகவும், பரதனை மகனாகவும் பெற்றுச் சிறந்தாள். நம் தேசமும் பாரதம் என்று பெயர் பெற்றது.

ராமாயணக் காலத்துக்கு முன்பிருந்தே பிரசித்தி பெற்றிருந்த இந்தத் தலம் காலப்போக்கில் சிதிலமடைந்து, இறைவனின் சந்நிதியும், திருவுருவமும் மண்ணில் புதையுண்டுவிட்டன.

மகாபாரதக் காலத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த அர்ஜுனன், கண்வரின் ஆசிரமம் இருந்த இந்தப் பகுதிக்கு வந்துசேர்ந்தான். முனிவர்கள் பலரும் இந்த இடத்தின் மேன்மையை அவனுக்கு எடுத்துரைத்தனர். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய பெருமாள், மண்ணில் தாம் புதையுண்டிருக்கும் இடத்தை அடையாளம் காட்டி, தம்மை வெளியில் எடுத்து ஓர் ஆலயம் அமைக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படியே அர்ஜுனன் அந்தப் பகுதியில் இருந்த அசுரர்களை அழித்து, வேட்டைப் பெருமாளுக்குச் சிறப்பான முறையில் ஆலயம் அமைத்தான். மேலும், ஆலயத்தில் நித்ய பூஜைகளும் விழாக்களும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டுத் தன் தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தான்.

பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினப்பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தின் அறங்காவலர்களாக, மேல்கோட்டை ஜனன்யாசார்யர் வழிவந்தவர்களே இருக்கின்றனர். அத்திரி முனிவரின் கோத்திரத்தைச் சேர்ந்த ‘கிடாம்பி’ என்ற வம்சத்தினர் தலைமுறை தலைமுறையாக `ஸ்தானீகர்கள் கைங்கர்யம்’ நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை ஸ்ரீவேட்டையாடியபிரான்
தேன்கனிக்கோட்டை ஸ்ரீவேட்டையாடியபிரான்

பெருமாளுக்குரிய திவ்யதேசங்கள் நூற்றியெட்டில் பிரதானமான திவ்யதேசங்கள் நான்கு. அவை திருப்பதி திருமலை, திருவரங்கம், காஞ்சி, மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம். அந்தத் திவ்யதேசங்களின் சம்பிரதாயம் சங்கமித்த தலம் இது. இங்கு மூலவரான பெருமாள் திருமலையிலிருந்து எழுந்தருளியவர்.

அதன் காரணமாக வேங்கடேச பெருமாளுக்கு உரிய சில வைபவங்கள் நடைபெறுகின்றன. ஆகமம், திருவரங்கத்தில் உள்ள முறைப்படி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால்தான் பகல் பத்து, இராப் பத்து போன்ற உற்சவங்கள் பாஞ்சராத்ர ஆகமப்படி நடைபெறுகின்றன.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலிருந்து உற்சவரை எழுந்தருளியச் செய்ததால், காஞ்சியில் நடைபெறக்கூடிய கருடசேவை போன்ற விசேஷ உற்சவங்களும் இங்கே நடைபெறுகின்றன.

திருநாராயணபுரத்திலிருந்து ஆயிஸ்வாமிகள் இந்தத் தலத்துக்கு எழுந்தருளியபடியால் திருநாராயணபுரம் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப் படுகிறது. அந்த வகையில் தேன்கனிக்கோட்டை திருத்தலத்துக்கு வந்து பெருமாளைச் சேவித்தால், நான்கு திவ்யதேசங்களையும் சேவித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை தேன்கனிக்கோட்டை சென்று வேட்டையாடியபிரானை தரிசனம் செய்து வாருங்கள். வாழ்வில் பாவங்கள் நீங்கிப் புண்ணிய பலம் பெருகுவதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *