சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் இறந்த சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி காங்கிரஸ் வழக்கறிஞரான ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது போலியாக என்சிசி முகாம் நடத்திய அந்த பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அனுமதியின்றி என்சிசி முகாம் நடத்திய அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளைக்குள் ( ஆக.29) விளக்கமளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் அளிக்கும் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு மருந்து வாங்கச் சென்றபோது இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். அவர் மதுபோதையில் இறக்கவில்லை. சிவராமன் தன்னை போலீஸார் கைது செய்வதற்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோரது பிரேதப் பரிசோதனை அறிக்கைகளையும், வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கைகளையும் தாக்கல் செய்கிறோம்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. போக்சோ சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் அவர்களது பெற்றோர் இழப்பீடு கோரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர் ஆகியோரும் உடனிருந்தனர்.
அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிவராமன் மற்றும் அவரது தந்தையின் மரணம் ஒரே நாளில் சந்தேகத்தை கிளப்பும் வகையில் நடந்துள்ளதால், இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டனர். மேலும், அந்தப் பள்ளிக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை மற்றும் அதுதொடர்பான அறிக்கையின் அடிப்படையில் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு கோரி மாணவிகளின் பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை சட்டப்படி பரிசீலித்து கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை அறிக்கையை தமிழக அரசு வரும் செப்.4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவும் தனியாக அந்தப்பள்ளியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.