கில்லிடம் கேப்டன்சியைக் கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை – கம்பீர் | No one acted in Gill favour by giving him the captaincy – Gambhir

Spread the love

ஷுப்மன் கில் கேப்டன்சி நல்ல தொடக்கம் கண்டுள்ளதாக கம்பீர் பாராட்டியுள்ளார். இங்கிலாந்தில் 2-2 என்று தொடரைச் சமன் செய்தது, இப்போது மே.இ.தீவுகளை 2-0 என்று வீழ்த்தியது ஆகியவை நல்ல தொடக்கம் என்கிறார் கம்பீர். மேலும் ஷுப்மன் கில்லிடம் கேப்டன்சியை கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை என்றார்.

உண்மையில் பயிற்சியாளராக இருப்பதால் இங்கிலாந்தில் 2-2 என்று டிரா செய்ததை அவர் விதந்தோதுகிறார், இதே வேறு பயிற்சியாளராக இருந்து இதே 2-2 டிரா செய்திருந்தால் தொடரை வென்றிருக்க வேண்டும் என்பார். நாமும் இதைத்தான் இப்போதும் சொல்கிறோம். பும்ரா பணிச்சுமை என்று தேவையற்ற பிரச்சனையைக் கிளப்பி இங்கு கொண்டு வந்து மண் பிட்சிலும், துபாய் வெயிலில் காயவிட்டதும் என்ன பணிச்சுமைக் குறைப்பு? ஒருவேளை பும்ராவை 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடச்செய்திருந்தால் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை நீண்ட காலம் கழித்துக் கைப்பற்றியிருக்கலாமே?! ஏன் கம்பீர் இப்படி யோசிக்கவில்லை. மேலும் இவரது செலக்‌ஷன் தவறுகளினால்தான் இங்கிலாந்தில் தொடரை வெல்ல முடியாமல் போயுள்ளது என்ற விமர்சனங்களுக்குக் கம்பீரின் பதில் என்ன?

இப்போது ஷுப்மன் கில் கேப்டன்சி நியமனம் குறித்து அவர் கூறும்போது, “டெஸ்ட் கேப்டனாகவோ இப்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவோ ஷுப்மன் கில்லை நியமித்ததன் மூலம் யாரும் கில்லுக்கு சாதகமாகச் செயல்படவில்லை. அவர் அதற்கு முழுத் தகுதியானவர். கடினமாக உழைக்கிறார், கேப்டன்சிக்கான அனைத்து அளவுகோல்களிலும் அவர் சிறப்பாகவே பொருந்துகிறார்.

ஒரு கோச்சாக, ஷுப்மன் கில் சரியான விஷயங்களைச் செய்கிறார், சரியான விஷயங்களையே பேசுகிறார், கடின உழைப்பு, பணிக்கடப்பாடு, அர்ப்பணிப்பு, தன்னை முன்னிறுத்திக் கொள்ளுதல், களத்தில் முதலில் நிற்பது… என்று அவர் இருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும்.

கேப்டன்சி அவருக்குக் கடினம் தான். இங்கிலாந்து தொடர் மிகக் கடினமானது. இரண்டு – இரண்டரை மாதங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் என்பது கடினம்தான். அதுவும் அதிரடி இங்கிலாந்து பேட்டிங், அனுபவமற்ற அணியைக் கொண்டு கில் செய்தது சாதனையே.

அனைத்திற்கும் மேலாக அவர் தன்னை நடத்திக் கொண்டது, அணியை வழிநடத்திய விதம், வீரர்கள் அவருக்கு அளித்த ஒத்துழைப்பு ஆகியவற்றையும் பேச வேண்டும். ரன்கள் எடுப்பதன் மூலம் மரியாதையைக் கோர முடியும் ஆனால் சரியான விஷயங்களைப் பேசுவதன் மூலம் சக வீரர்களின் மரியாதையைப் பெறுவதுதான் விஷயம். என்னைப் பொறுத்தவரை அவர் அற்புதமாகவே செயல்படுகிறார். அணியும் அவரின் தலைமையில் சிறப்பாகவே செயல்படுகிறது.” என்கிறார் கம்பீர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *