`கில் அந்த இடத்துக்குத் தகுதியானவர்!' – சஞ்சு பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார்

Spread the love

இந்தியா vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் நவம்பர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 என தென்னாப்பிரிக்கா வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என இந்தியா வென்றது.

அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை கட்டாக்கில் தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில்
India Test and ODI Team Captain Shubman Gill

கழுத்து வலி காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தவறவிட்ட கேப்டன் சுப்மன் கில், தற்போது டி20 தொடருக்குத் திரும்பியிருக்கிறார்.

முன்னதாக, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடர் மூலம் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கில் டி20 அணியில் மீண்டும் ஓப்பனிங் வீரராகவேத் திரும்பினார்.

ஆனால் அந்த ஒன்றரை வருட இடைவெளியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் வீரராக சிறப்பாக விளையாடி வந்தார்.

கில்லின் மறு வருகைக்குப் பின்னர் டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு நிலையான பேட்டிங் பொசிஷனே இல்லை.

ஒரு போட்டியில் ஒன் டவுனிலும் இன்னொரு போட்டியில் நம்பர் 4 அல்லது நம்பர் 5 இடத்திலும் ஆட வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், ஓப்பனிங் இடத்துக்கு கில் தகுதியானவர் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

நாளை நடைபெறும் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய சூர்யகுமார் யாதவ், “அணியில் இப்போது ஓப்பனிங் வீரர்களைத் தவிர அனைவரும் எந்த இடத்திலும் இறங்கத் தயாராக இருக்க வேண்டும்.

சஞ்சு சாம்சன் ஓப்பனிங் ஆடியபோது சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், கில் அவருக்கு முன்பாக இலங்கைத் தொடரில் (2024) ஓப்பனிங்கில் ஆடியிருந்தார். எனவே அந்த இடத்துக்கு அவர் தகுதியானவர்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

அதேசமயம் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். அவர் எந்த இடத்திலும் ஆடத் தயாராக இருக்கிறார். ஓப்பனிங் வீரர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்களிடம் நம்பர் 3 முதல் 6 வரை எந்த இடத்திலும் இறங்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

இருவருமே எங்கள் திட்டத்தில் இருக்கின்றனர். அவர்களைப் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *