பட மூலாதாரம், Getty
கிளாஸ்கோ விளையாட்டு போட்டிகள் நிறைவேறின
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக் கிழமை முடிவுக்கு வந்துள்ளன.
மொத்தமாக 17 விளையாட்டுப் பிரிவுகளில் 261 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் கடந்த 11 நாட்களாக நடந்தன.
இம்முறை விளையாட்டு விழாவில் இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி அடங்கலாக 174 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் இங்கிலாந்து 28 ஆண்டுகளுக்குப் பின்னர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா 49 தங்கம், 42 வெள்ளி அடங்கலாக 137 பதக்கங்களை வென்றது.
கனடா 32 தங்கம் அடங்கலாக 82 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு வந்தது.
போட்டியை நடத்திய ஸ்காட்லாந்து 19 தங்கம் அடங்கலாக 53 பதக்கங்களை வென்று நாலாவது இடத்தைப் பிடித்தது.

கடந்த தடவை தில்லி காமன்வெல்த் போட்டிகளில் 38 தங்கம் அடங்கலாக 101 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த இந்தியா இம்முறை கிளாஸ்கோவில் ஐந்தாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
இந்தியா ஐந்தாம் இடம்
இந்தியா இம்முறை 15 தங்கம், 30 வெள்ளி அடங்கலாக 64 பதக்கங்களை வென்றுள்ளது.
இவற்றில் குறிபார்த்து சுடுதலில் 4 தங்கம், 9 வெள்ளி அடங்கலாக 17 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.
மல்யுத்தத்தில் 5 தங்கம் அடங்கலாக 13 பதக்கங்களையும் பளுதூக்கலில் 3 தங்கம் அடங்கலாக 14 பதக்கங்களையும் இந்தியா வென்றது.
மற்றபடி பாட்மின்டன், ஸ்குவாஷ், தடகளம் ஆகிய விளையாட்டுக்களில் தலா ஒவ்வொரு தங்கத்தையும் ஒரிரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.
குத்துச் சண்டையில் 4 வெள்ளி அடங்கலாக 5 பதக்கங்களும் ஜூடோவில் 2 வெள்ளி அடங்கலாக 4 பதக்கங்களும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஒரு வெண்கலமும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்திய ஹாக்கி ஆண்கள் அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிவரை முன்னேறியும் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2010 தில்லி போட்டிகளைப்போல வெள்ளிப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது.
இலங்கை அணியிடம் ஒரு வெள்ளி
பட மூலாதாரம், AFP
இலங்கை அணி, 104 விளையாட்டு வீரவீராங்கனைகள் மற்றும் 45 அதிகாரிகளுடன் இம்முறை கிளாஸ்கோ வந்திருந்தாலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது.
2010 தில்லி போட்டிகளில் வெண்கலம் வென்றிருந்த இம்முறை இலங்கை அணித் தலைவர் சுதேஷ் பீரிஸ் பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கையை பதக்கப் பட்டியலில் சேர்த்தார்.
தில்லி போட்டிகளில் பளுதூக்கலில் ஒரு வெள்ளியையும் ஒரு வெண்கலத்தையும் இலங்கை வென்றிருந்தது.
தில்லி காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த குத்துச் சண்டை வீரர் மஞ்சுள வன்னியாராச்சியின் பதக்கம் ஊக்க மருந்து குற்றச்சாட்டில் பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முடிவு விழா
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு- முடிவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு ஹெம்டன்பார்க் மைதானத்தில் நடக்கின்றது.
இதன்போது, 2018-ம் ஆண்டு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு விழாவை நடத்தவுள்ள ஆஸ்திரேலியாவிடம் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் அடுத்த கட்டப் பொறுப்பை ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.