அவள் விகடன் நடத்திய “சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3′ நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பிரபல செஃப் தீனா நடுவராக வந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி, தங்களது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டதுடன் சமையல் டிப்ஸ்களையும் வழங்கினர்.
முன்னதாக விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு என 12 இடங்களில் நடந்தது நினைவிருக்கலாம். அங்கு வெற்றி பெற்றவர்கள் இறுதிச் சுற்று நிகழ்ச்சிக்காகச் சென்னை வரவழைக்கப்பட்டிருந்தனர்.
மொத்தம் 38 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றில் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை போட்டி நடந்துகொண்டிருந்தபோது அரங்கத்திற்கு வருகை தந்திருந்த நடிகர் சாய் சக்தியிடம் பேசினோம்.
”விஜய் டிவியில் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி ஒளிபரப்பான போது அதில் கலந்துகிட்டேன். அப்ப எனக்கு சமையல் சுத்தமா தெரியாது. நிகழ்ச்சிக்குக் கூப்பிடும் போதே சொல்லிட்டேன். ஆனாலும் டிவியில சமையல் நிகழ்ச்சின்னாலே இதுவரை சீரியஸாகவே காட்டிட்டு இருந்தாங்க. அதை மாத்தி ஜாலியான ஒரு சமையல் ஷோ மாதிரி பண்ணப் போறோம், அதனால நீங்க வாங்க’னு சொல்லிக் கூப்பிட்டாங்க.
அதனால நானும் போனேன். சேனல் விரும்பியபடி ஷோ பிக் அப் ஆகிடுச்சு. ஆனா நாந்தான் மாட்டிகிட்டேன். ஷூட்டிங்கின் போது தாமு சார் கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன்.
‘சமையல்னா என்னன்னே தெரியாம இங்க ஏன்யா வந்த’னு நேரடியாகவே கேட்டார். அவர்கிட்ட உண்மையை அப்படியே சொல்ல முடியுமா, அதனால திட்டு வாங்கினேன். ஆனா அந்த நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வர்றப்ப சமையல்ல ஓரளவு நம்பிக்கை வந்திருந்தது.
அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்துட்டே கலைஞர் டிவியில சமையல் ஷோவுக்கு ஆங்கரா கூப்பிட்டாங்க.. பிறகு குக்கு வித் கோமாளிக்கும் கூப்பிட்டாங்க. இப்ப நான் நல்லாவே சமைப்பேன்” என்றார் அவர்.