குஜராத்தின் வடக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாள்களாக வடக்கு குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. மாநிலத்தில் உள்ள 206 நீர்த்தேக்கங்களில் 66 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம் தாலுகாவில் 112 மி-மீ மழையும், அரவல்லி மாவட்டத்தில் மேகராஜ் பகுதியில் 101 மி.மீ மழையும், மெங்ஹசானா மாவட்டத்தின் விஜாப்பூர் தாலுகாவில் 205 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. அகமதாபாத் நகரிலும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் 36 பஞ்சாயத்து சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தஹோட், சோட்டா உதேபூர் மாவட்டங்களில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் அங்கு சிக்கித் தவித்த ஏழு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர்.
நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவாடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணை 88 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் எட்டு குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களும் வெவ்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 27 வரை தெற்கு குஜராத்தின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை சராசரி ஆண்டு மழையாக 76.57 சதவீதத்தைப் பெற்றுள்ளது, தெற்கு குஜராத் பகுதியில் அதிகபட்சமாக 90.2 சதவீதமும், கட்ச் 88.97 சதவீதமும், சௌராஷ்டிராவில் 82.8 சதவீதமும் மழை பெய்துள்ளது.