டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு குஜராத் திரும்பிய ஹார்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தார். தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசனின் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றியது.
டி20 உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பை வான்கடே மைதானத்திலும் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு குஜராத் திரும்பிய ஹார்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு குஜராத்தின் வதோதராவுக்கு இன்று வந்தடைந்த ஹார்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ”ஹார்திக் பாண்டியா – வதோதராவின் பெருமை” என்ற வாசகம் எழுதப்பட்ட திறந்தவெளி பேருந்தில் வந்த ஹார்திக் பாண்டியாவை வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். ரசிகர்களின் வரவேற்பால் மிகுந்த உற்சாகமடைந்த ஹார்திக் பாண்டியா, அவர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, ஹார்திக் பாண்டியா ரசிகர்களின் கிண்டல் கேலிகளுக்கு ஆளானார். ஆனால், அவரது மனவலிமையால் இன்று ரசிகர்களின் அன்புக்கு மீண்டும் சொந்தக்காரராகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா 11 விக்கெட்டுகள் மற்றும் 144 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.