குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு காரணமாக 33 மாவட்டங்களில் உள்ள அரசின் 54 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அதுபற்றிய தரவுகளை பேரவையில் சமர்ப்பித்தார். அதில், துவாரகா மாவட்டத்தில் 9 பள்ளிகளும், ஆரவல்லி(7), அம்ரெலி(6), போர்பந்தர்(6), ஜுனாகத் (4), சோட்டா உதய்ப்பூர், கட்ச், ராஜ்கோட்டில் தலா மூன்று பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று கேதா, ஜாம் நகர், நவசரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினை இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி, பாவ்நகர், டங், கிர் சோம்நாத், மஹசனா, பஞ்சமஹால், சூரத், சுரேந்திரநகர் ஆகிய மாவட்டங்களும் தலா ஒரு பள்ளியை இழந்திருக்கின்றன.
சிதிலமடைந்த பள்ளிகளும் ஒற்றை வகுப்பறைகளும்!
பள்ளிகள் மூடப்படுவது ஒருபுறம் இருக்க பள்ளியின் கட்டமைப்புகளையும் வெகுவாக மாணவர்களின் கல்வியைப் பாதித்திருக்கிறது. கடந்தாண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஷைலேஷ் பார்மரின் கேள்விக்கு பதிலளித்த ஆளும் அரசு 341 பள்ளிகள் வெறும் ஒரேயொரு வகுப்பறையுடன் செயல்படுவதையும் ஒப்புக் கொண்டிருக்கிறது. குறைவான மாணவர்களில் வருகையே பள்ளிக் கட்டமைப்புகளுக்கு காரணம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், பாழடைந்த பள்ளிக் கட்டடங்களை இடித்து புதிய பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கு போதிய இடமில்லை என்றும் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.