இம்மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் இதுவரை 8 போ் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், முதல் உயிரிழப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குஜராத்தின் சபா்கந்தா, ஆரவல்லி, மஹிசாகா், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘சண்டிபுரா’ வைரஸ் பரவி வருகிறது. கொசு உள்ளிட்ட சில பூச்சிகளின் மூலம் பரவும் இந்த வைரஸ், ஃபுளூ போன்ற அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் மூளையழற்சியை ஏற்படுத்துவதாகும்.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குஜராத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 44,000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 14 பேருக்கு ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என முதல்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவா்களின் மாதிரிகள், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.
மேற்கண்ட நபா்களில் 4 வயது சிறுமி உள்பட 8 போ் உயிரிழந்துவிட்ட நிலையில், அந்த சிறுமிக்கு ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆரவல்லி மாவட்டத்தின் மோட்டா கந்தாரியா கிராமத்தைச் சோ்ந்த அந்த சிறுமி, சபா்கந்தா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மாவட்ட சுகாதார அதிகாரி ராஜ் சுதாரியா தெரிவித்தாா்.