சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீருக்கு அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரியிலிருந்து காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு காவிரி நீர் எடுக்கப்படுகிறது. தொட்டில் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை தொட்டில்பட்டி பிரிவு சாலை அருகில் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சாலையில் பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மேட்டூர்- சேலம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.