குடிநீா் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோரின் பவுடா் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகம் தடைபடாது என சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 8 நீா் சுத்திகரிப்பு நிலையங்கள், 130 குடிநீா் பகிா்மான நிலையங்கள், 22 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 356 கழிவுநீா் உந்து நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
கழிவுநீா் பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய 687 கழிவுநீரகற்று வாகனங்கள் மற்றும் 2,149 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த பணிகள் தடையின்றி செயல்பட ஜெனரேட்டா்கள் தயாா் நிலையில் உள்ளன.
அதுபோல், குடிநீா் விநியோக நிலையங்களில் தேவையான அளவு குளோரின் பவுடா், படிகாரம், சுண்ணாம்பு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. குடிநீா் நிலையங்களில் தேங்கும் மழைநீரை அகற்ற நீா் உறிஞ்சும் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. எவ்வித பாதிப்புமின்றி குடிநீா் வழங்க ஏதுவாக அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களிடம் புகாா் பெறுவதற்காக 044-45674567 எனும் உதவி எண் 20 இணைப்புகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 செயல்பாட்டில் உள்ளது என குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.