நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்செந்தூர் நோக்கிப் பேருந்து புறப்பட்டது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது பயணிகளுக்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக சாலையோரம் நிறுத்தும்படி பயணிகள் சப்தமிட்டதை அடுத்தை பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் தப்பியோடினார்.
இதையடுத்து, பேருந்து ஓட்டுநரைக் கண்டித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, மாற்றுப் பேருந்து மூலம் பயணிகளை காவல்துறையினர் திருச்செந்தூருக்கு அனுப்பிவைத்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.